மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் 748 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் 748 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 748 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், அரசு காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டும், நூறுநாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் நேற்று விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, சங்கரன், கீதா, முருகன், விழுப்புரம் வட்ட செயலாளர் கண்ணப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அம்பிகாபதி, வீரமணி, பிரகாஷ், கார்க்கி, பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கைது

இவர்கள் அனைவரும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பியவாறு ரெயில் நிலையத்திற்குள் சென்றனர். அவர்களை போலீசார், தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அதையும் மீறி அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் சென்று அங்குள்ள 5-வது நடைமேடையில் இருந்து காலை 11.15 மணியளவில் புறப்பட தயாராக இருந்த திருப்பதி- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், மூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 155 பேரை கைது செய்து விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திண்டிவனம்

இதேபோல் திண்டிவனத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு அறிவழகன், வட்டச் செயலாளர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 49 பெண்கள் உள்பட 155 பேரை திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசன், ஸ்டாலின் மற்றும் ரெயில்வே போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

3 இடங்களில் சாலை மறியல்

மேலும் கண்டாச்சிபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி முன்பு வட்ட செயலாளர் கணபதி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 65 பெண்கள் உள்பட 163 பேரும், மேல்மலையனூர் ஸ்டேட் வங்கி முன்பு வட்டக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 69 பெண்கள் உள்பட 145 பேரும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை இந்தியன் வங்கி முன்பு மாவட்டக்குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 130 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஆக மொத்தம் மாவட்டத்தில் 2 இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்திலும், 3 இடங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட 243 பெண்கள் உள்பட 748 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story