12 மையங்களில் 7 ஆயிரம் மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுதுகின்றனர்
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 12 மையங்களில் 'நீட்' தேர்வை 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 12 மையங்களில் 'நீட்' தேர்வை 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
'நீட்' தேர்வு
மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' தேர்வு வருகிற 17-ந்தேதி தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இதற்காக, நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க தேசிய தேர்வுகள் முகமை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு வரை தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்' வெளியிடும் போது தான், தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரும். இது, தேர்வு நேரத்தில் தேர்வர்களுக்கு சிரமமாக உள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து 'நீட்' தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு, எந்த நகரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வசதியை, முதல்முறையாக தேசிய தேர்வுகள் முகமை இந்த ஆண்டு ஏற்படுத்தியுள்ளது.
7 ஆயிரம் மாணவர்கள்
இதுதவிர, 'நீட்' தேர்வுக்கு இறுதி செய்யப்பட்ட மையங்களில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் தேவையான வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ளவும், 'நீட்' தேர்வு மைய நகர ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேசிய தேர்வுகள் முகமை அறிவுறுத்தியுள்ளது. அதற்கேற்ப, 'நீட்' தேர்வு மையங்கள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது.
அதன்படி, வேலுார் மாவட்டத்தில் 'நீட்' தேர்வுக்கு, காட்பாடி சிருஷ்டி வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், சன்பீம் பள்ளி, கிங்ஸ்டன் பள்ளி, சாயிநாதபுரம் டி.கே.எம். மகளிர் கல்லூரி மற்றும் வி.வி.என்.கே.எம். சீனியர் செகண்டரி பள்ளி, திருமலைக்கோடி ஸ்பார்க் பள்ளி, ஸ்ரீபுரம் நாராயணி பள்ளி, சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி, வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரி, ராணிப்பேட்டை டி.ஏ.வி. பெல் பள்ளி ஆகிய 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், வேலுார், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.