பூண்டி, செம்பரம்பாக்கம் உள்பட 5 ஏரிகளில் 70 சதவீதம் தண்ணீர் இருப்பு


பூண்டி, செம்பரம்பாக்கம் உள்பட 5 ஏரிகளில் 70 சதவீதம் தண்ணீர் இருப்பு
x

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் தற்போது 70 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.

திருவள்ளூர்

இதனால் அடுத்த 7 மாதங்களுக்கு சென்னை நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டி.எம்.சி. இருப்பு

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றப்படுகிறது. இந்த 5 ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதில் புழல் ஏரியின் உயரம் 21.20 அடியாகவும். இதில் தற்போது 19.80 அடி தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3.300 டி.எம்.சி.ஆகும். இதில் 2.922 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி ஆகும். 1.086 டி.எம்.சி. தண்ணீரைச் சேமித்து வைக்கலாம். இதில் மட்டும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. அதாவது 2.90 அடி நீர் மட்டும் இருப்பு உள்ளது.

பூண்டி நீர்த்தேக்கம்

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 25 அடி ஆகும். இதில் 22.20 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 3.545 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் 3.172 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாகும். இதில் தற்போது 27.30 அடி தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். தற்போதைய நிலையில் 1.194 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. தேர்வாய் நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 36.61 அடியாகும். இது தற்போது முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

குடிநீர் வினியோகம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் தற்போது 7.973 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அதாவது 70 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை நகர மக்களுக்கு மாதத்துக்கு சராசரியாக 1 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சென்னையில் 7 மாதத்திற்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story