முதியவருக்கு 7 ஆண்டு சிறை
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 60). இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி கோவையில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அப்போது அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று கூறியது. ஆனால் அந்த சிறுமியை ராஜன் தடுத்து நிறுத்தி இதைவெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் அப்போது அந்த சிறுமி இதை வெளியே சொல்லவில்லை. பின்னர் மறுநாள் இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடந்த பெற்றோர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ராஜன் மீது மிரட்டல், தடுத்தல் மற்றும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைதுசெய்தனர்.
7 ஆண்டு சிறை
பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்தநிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜனுக்கு போக்சோ சட்டம் 9- கே பிரிவின் படி 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டம் 9-ஐ பிரிவின்படி 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.
மேலும் மிரட்டல் வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் தொல்லை குறித்து பெற்றோரிடம் கூற சென்ற சிறுமியை வழிமறித்து தடுத்து நிறுத்திய வழக்கில் ஒரு ஆண்டு சிறையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் ராஜன் 7 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க கூடும்.