ரெயிலில் பயணி தவறவிட்ட 7 பவுன் தங்க நகை மீட்பு
ரெயிலில் பயணி தவறவிட்ட 7 பவுன் தங்க நகை மீட்டு ஒப்படைக்கப்பட்டது.
செங்கோட்டை:
தென்காசி அருகே கீழப்புலியூரை சேர்ந்தவர் பூரணி. இவர் 7 பவுன் தங்க நெக்லஸ், 2 புது பட்டு புடவைகள் ஆகியவற்றை ஒரு பையில் வைத்து நெல்லையில் இருந்து செங்கோட்டை ரெயிலில் பயணம் செய்தார். கீழப்புலியூர் வந்தவுடன் நகை வைத்திருந்த பையை ரெயிலில் மறந்து வைத்து விட்டு இறங்கி விட்டார். உடனடியாக ரெயில் புறப்பட்டு விட்டதால், தங்கநகையை பையுடன் மறந்து விட்டு இறங்கிய ஞாபகம் வந்ததும் பூரணி, கீழப்புலியூர் ரெயில் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். அவர் உடனடியாக செங்கோட்டை ரெயில்வே பாதுகாப்பு படை வீராங்கனை பி.பொற்செல்விக்கு தகவல் தெரிவித்து தங்க நகை பையை தேட அறிவுறுத்தினார்.
அதன்படி அந்த ரெயில் செங்கோட்டை வந்தவுடன், பூரணி பயணம் செய்த ரெயில் பெட்டியில் பொற்செல்வி சோதனை செய்தார். ரெயில் பெட்டியில் நகைப்பை இருப்பதை கண்டுபிடித்து ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தார். இதுகுறித்து பூரணிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பூரணி செங்கோட்டை ரெயில்வே போலீசாரிடம் வந்து பை பற்றிய அடையாளங்களை கூறி ரெயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவக்குமாரிடம் பெற்றுக் கொண்டார். ரெயில்வே பாதுகாப்பு படை வீராங்கனை பொற்செல்வியின் செயலை அதிகாரிகள் பாராட்டினர்.