மான் வேட்டையாடிய 7 பேர் கைது
நெல்லை அருகே மான் வேட்டையாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கூடல்:
நெல்லை அருகே மான் வேட்டையாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் ரோந்து
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 3 மணியளவில் பனையங்குறிச்சி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படியாக கார் ஒன்று நிற்பதை பார்த்து அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில் காருக்குள் இறந்த நிலையில் புள்ளிமான் இருப்பதையும், 2 துப்பாக்கிகளுடன் 7 பேர் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
மான் வேட்டை
இதையடுத்து அவர்களை பாப்பாக்குடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில், வனக்காவல் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் வனவர் சங்கர்ராஜா, வனக்காப்பாளர் டென்சிங் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் பிடிபட்ட 7 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மேலகல்லூரைச் சேர்ந்த ராமையா (வயது 50), சேரன்மாதேவியை சேர்ந்த குமார் (48), ரமேஷ் (26), ஊத்துமலையை சேர்ந்த கிருஷ்ணா (22), மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த யோஸ்வா ராஜ் (38), வாடிப்பட்டியை சேர்ந்த போவாஸ் (25), கோபிசெட்டிபாளையத்ைத சேர்ந்த பிரகாஷ் (29) ஆகியோர் என்பதும், துப்பாக்கியால் சுட்டு மானை வேட்டையாடியதும் தெரியவந்தது.
7 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 7 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 48 தோட்டாக்கள், ஒரு கார், ஏ.டி.எம். கார்டுகள், செல்போன் மற்றும் இறந்த மான் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.