குழந்தைகள் உள்பட 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
இலங்கையில் இருந்து குழந்தைகள் உள்பட 7 பேர் அகதிகளாக நள்ளிரவில் தனுஷ்கோடி வந்தனர். அவர்களுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த ஒருவரும் உடன் வந்ததால் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ராமேசுவரம்,
இலங்கையில் இருந்து குழந்தைகள் உள்பட 7 பேர் அகதிகளாக நள்ளிரவில் தனுஷ்கோடி வந்தனர். அவர்களுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த ஒருவரும் உடன் வந்ததால் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தனுஷ்கோடிக்கு அகதிகள் வருகை
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், உணவு கிடைக்காமலும் அங்குள்ள மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இதைதொடர்ந்து அகதிகளாக தமிழகத்தை ேநாக்கி அங்குள்ளவர்கள் அவ்வப்போது வருகின்றனர். இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இலங்கையின் மன்னார் பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகு மூலமாக குழந்தைகள் உள்பட 8 பேர் அகதிகளாக நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்து இறங்கினார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் ராமேசுவரம் கடலோர ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.
8 பேரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி மண்டபத்தில் உள்ள கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
இலங்கை வல்வெட்டு துறை பகுதியைச் சேர்ந்த கமலா ராணி (வயது 45), அவருடைய மகன்கள் ஐங்கரன் (19), ஸ்ரீராம் (14), மகள் சசிகலா(24), மருமகன் லவேந்திரன்(24), பேத்திகளான 2 பெண் குழந்தைகள் ஆகியோரும், வவுனியா செட்டிகுளத்தைச் சேர்ந்த விஜயகாந்தன் (33) ஆகிய 8 பேர் வந்தது தெரிய வந்தது.
ரூ.5 லட்சம் கொடுத்தேன்
இதில் கமலா ராணி போலீசாரிடம் கூறும்போது, "எனக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உண்டு. இதில் மூத்த மகள் மேகலா வரவில்லை. ஆனால், அவளுடைய மகளான 9 வயது சிறுமி நிலானி எங்களுடன் வந்துள்ளாள். இதே போல் 2-வது மகள் சசிகலா தன்னுடைய, ஒன்றரை வயது குழந்தையுடன் வந்துள்ளாள். கடந்த 2 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறேன்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனால் கடல் வழியே தனுஷ்கோடி வர முடிவு செய்தோம்.. திருச்சியில் எங்களுடைய உறவினர்கள் தங்கி இருப்பதால், அங்கு செல்ல விரும்புகிறோம். இதற்காக மன்னார் பகுதியில் இருந்து பேசாலையை சேர்ந்த ஜெனிஸ்டன் என்பவரிடம் இலங்கை பணம் ரூ.5 லட்சம் கொடுத்தோம். அதைதொடர்ந்து, 2 பேர் எங்களை படகில் ஏற்றி நள்ளிரவு ஒரு மணிக்கு அரிச்சல்முனை கடற்கரையில் இறக்கிவிட்டு திரும்பி சென்றுவிட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்
இவர்களுடன் வந்த விஜயகாந்தன் போலீசாரிடம் கூறுகையில், "இலங்கை பூனகிரி எனது சொந்த ஊர். அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். அதன் பின்னர் 2001-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரின் போது குண்டுக்காயம் பட்டு மயக்க நிலையில் கிடந்த என்னை இலங்கை ராணுவம் பிடித்துச்சென்று 3 ஆண்டுகள் முகாமில் அடைத்து வைத்தது. பின்னர் 2010-ம் ஆண்டு விடுவித்தது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த கார்த்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றில் கூலி வேலை செய்து வந்தேன். பொருளாதார நெருக்கடியால், நான் மட்டும் தனியாக ரூ.1 லட்சம் இலங்கை பணம் கொடுத்து, படகில் மேற்கண்ட 7 பேருடன் தனுஷ்கோடிக்கு தப்பி வந்தேன்" என்று தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள ஒருவர் குடும்பத்தினரை அழைத்து வராமல் படகுமூலம் தனியாக தனுஷ்கோடி பகுதிக்கு அகதிகளுடன் வந்து இறங்கி உள்ளது உளவு பிரிவு போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.