7 ரெயில்களின் வேகம் அதிகரிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தெற்கு ரெயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் 7 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இனி பயணநேரம் குறைய வாய்ப்புள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் 7 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இனி பயணநேரம் குறைய வாய்ப்புள்ளது.
130 கிலோமீட்டர் வரையிலான ரெயில்களின் வேகம் அதிகரிப்பு மற்றும் ரெயில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை அதிகரிப்பு ஆகியவை காரணமாக 7 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரமும் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி செல்லும் ஜிடி எக்ஸ்பிரஸ் 6.30 மணியளவில் புதுடெல்லியை சென்றடைந்த நிலையில் தற்போது இதன் வேகம் நீட்டிக்கப்பட்டு 90 நிமிடங்கள் முன்னதாக காலை 5.05 மணியளவில் டெல்லி சென்றடைய உள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் மற்றொரு ரெயிலான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வழக்கத்தை காட்டிலும் 70 நிமிடங்கள் முன்னதாக டெல்லி சென்றடைய உள்ளது.
மேலும் குருவாயூர்-புனலூர் எக்ஸ்பிரஸ் 50 நிமிடங்களும், மும்பை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 60 நிமிடங்களும், ராஜ்கோட்-கோவை எக்ஸ்பிரஸ் 70 நிமிடங்களும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்களும் பயணநேரம் குறைக்கப்பட்டு வழக்கத்தை விட முன்னதாக ரெயில்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.