லாரி மோதி 7 ஆடுகள் பலி


லாரி மோதி 7 ஆடுகள் பலி
x

பெரம்பலூர் அருகே லாரி மோதி 7 ஆடுகள் பலியானது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி 3-வது வார்டுக்குட்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 45), அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (35). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று களரம்பட்டி காட்டு பகுதியில் 8 ஆடுகளை மேய்த்து விட்டு பட்டியில் அடைப்பதற்காக தனலட்சுமி மாலை 6.45 மணியளவில் ஓட்டி வந்தார். அப்போது பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஆடுகளை ஓட்டி வந்தபோது, எதிரே வந்த சிமெண்டு பல்கர் லாரி ஆடுகள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தன. ஒரு ஆடு படுகாயம் அடைந்தது. இந்த தகவல் அந்த கிராம மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியது. மேலும் ஆடுகளை இழந்த தனலட்சுமி மற்றும் அவருடன் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து இறந்த ஆடுகளை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், பெரம்பலூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆடுகள் மீது மோதி விட்டு சென்ற லாரியை பிடித்து, அதன் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செத்துப்போன ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.


Next Story