வங்கிகளில் 2 கிலோ போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் 2 கிலோ போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் 2 கிலோ போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர் காந்திமதிநாதன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திடம் ஒரு புகார் அளித்தார்.
அதில், கடந்த 1-3-2022-ந் தேதி முதல் 30-9-2022-ந் தேதி வரை அருந்தவபுரத்தை அடுத்த திருக்கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 54) என்பவர் தனது பெயரிலும் தனது மனைவி பவானி மற்றும் பவானியின் தாயார் லட்சுமி என்பவருடைய பெயரிலும் 19 தவணைகளாக 1,378 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட 'கில்ட்' நகைகளை அடகு வைத்து ரூ.44 லட்சத்து 55 ஆயிரம் மோசடியாக பெற்று வங்கியை ஏமாற்றி உள்ளார் என கூறி இருந்தார்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் அருந்தவபுரம் பெடரல் வங்கி கிளை மேலாளர் விசாலி என்பவர் போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த புகாரில், அருந்தவபுரத்தை சேர்ந்த ரமேஷ் தனது பெயரிலும் தனது மனைவி பவானி மற்றும் தனது வயலில் வேலை பார்த்த அபூர்வம் என்பவருடைய பெயரிலும் 8 தவணைகளாக 681.3 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட கில்ட் நகைகளை அடகு வைத்து ரூ.24 லட்சத்து 34 ஆயிரத்து 700 மோசடியாக பெற்று வங்கியை ஏமாற்றி உள்ளார் என கூறி இருந்தார்.
2 வங்கிகளிலும் மொத்தம் 2 கிலோ அளவுக்கு போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது.
குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் ராமதாஸ், ஏட்டு அமுதா, போலீஸ்காரர்கள் கவுதம், கார்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
2 பேர் கைது
இந்த தனிப்படையினர் போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து பணத்தை பெற்று வங்கியில் மோசடி செய்து ஏமாற்றி கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த ரமேசை, புதுச்சேரியில் வைத்து கைது செய்தனர்.
மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட மன்னார்குடி அசேஷம் கிருஷ்ணா நகரை சேர்ந்த முருகையன்(49) என்பவரை மன்னார்குடியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்வேறு இடங்களில் மோசடி
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் முருகையன் இதற்கு மூளையாக செயல்பட்டதோடு கும்பகோணம், சிதம்பரம் போன்ற பகுதிகளில் நகை செய்பவர்கள் மூலமாக தங்க நகை போன்று போலியாக நகை செய்து வந்ததும் மேலும் பல்வேறு நபர்கள் மூலமாக மன்னார்குடி, தஞ்சை, கும்பகோணம் போன்ற பகுதிகளில் பல தனியார் நகை அடகு கடை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.