தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் பெற 6,785 பேர் காத்திருப்பு
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக 6 ஆயிரத்து 785 பேர் காத்திருக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் கூறி உள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, முகாமை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீ்ப்சிங் பேடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உலகிலேயே ஸ்பெயின் நாடுதான் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி நாடாக திகழ்கிறது. ஆனால், இந்தியாவில் தமிழ்நாடுதான் ஸ்பெயின் போல உள்ளது. இங்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அதிகம் நடைபெறுகிறது.
36 ஆயிரம் நன்கொடையாளர்கள்
தமிழ்நாட்டில் இதுவரை 36 ஆயிரத்து 472 நன்கொடையாளர்கள் தங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி மொழிப்பத்திரம் அளித்து உள்ளனர். மாநிலத்தில் உள்ள 169 ஆஸ்பத்திரிகளில் உடல் உறுப்புகள் சேகரிக்கப்பட்டு வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. விடியல் என்ற செயலி மூலமாக இந்த அறுவை சிகிச்சைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சேவையை தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆணையம் மூலம், இதுவரை 1,737 உடல் உறுப்பு தானங்கள் பெறப்பட்டு உள்ளன. இதன் மூலம் 10 ஆயிரத்து 353 உடல் உறுப்புகள் பெறப்பட்டு உள்ளன.
6,785 பேர் காத்திருப்பு
இந்த ஆண்டு மட்டும் 128 நன்கொடையாளர்கள் மூலம் 733 பேர் பலன் அடைந்துள்ளனர். 53 பேருக்கு இதயமும், 84 பேருக்கு நுரையீரலும், 114 பேருக்கு கல்லீரலும், 228 பேருக்கு சிறுநீரகமும் வெற்றிகரமாக மாற்றப்பட்டு உள்ளது.
இதுதவிர மாநிலத்தில் 6 ஆயிரத்து 205 பேர் சிறுநீரகத்துக்காகவும், 443 பேர் கல்லீரலுக்காகவும், 75 பேர் இதயத்துக்காகவும், 62 பேர் நுரையீரலுக்காகவும் என மொத்தம் 6 ஆயிரத்து 785 பேர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
எனவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் விலை மதிப்பற்ற உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பிளீடர்
இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல், அரசு வக்கீல்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல ஐகோர்ட்டு மதுரை கிளையில் இருந்தும் நீதிபதிகள், வக்கீல்கள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநில அரசு பிளீடர் பா.முத்துக்குமார், தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி பத்திரத்தை அளித்தார்.