66-வது ஆண்டு நினைவு தினம்: அம்பேத்கர் படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை


66-வது ஆண்டு நினைவு தினம்: அம்பேத்கர் படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
x

அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை,

அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை, தனது கணவர் டாக்டர் சவுந்தரராஜனுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை துறைமுக வளாகத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

கட்சி அலுவலகங்களில்...

திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்தார்.

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சைதாப்பேட்டை எம்.சி. ராஜா விடுதி வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துறைமுக வளாகத்தில்...

சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு துறைமுக தலைவர் சுனில் பாலிவால், துணைத்தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்பட நிர்வாகிகள் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் ஜங்ஷனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் ஏ.ஜி.மவுரியா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு கட்சி பொதுச்செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு பொதுமேலாளர் அர்.என்.சிங் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

டெல்லி

நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படத்துக்கு நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story