வெங்காய ஏற்றுமதி 64 சதவீதம் அதிகரிப்பு
நடப்பு ஆண்டில் வெங்காய ஏற்றுமதி 64 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், இலக்கை விட சாகுபடி நிலப்பரப்பு உயர்ந்துள்ளதாகவும் வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
நடப்பு ஆண்டில் வெங்காய ஏற்றுமதி 64 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், இலக்கை விட சாகுபடி நிலப்பரப்பு உயர்ந்துள்ளதாகவும் வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
அதிகரிப்பு
வெங்காயத்தை பொருத்தமட்டில் கடந்த 2020-2021-ல் 15.78 லட்சம் டன்னும், 2021- 2022-ல் 15.37 லட்சம் டன்னும், 2022-2023-ல் 25.25 லட்சம் டன்னும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக வங்கதேசம், மலேசியா, வளைகுடா நாடுகள் இலங்கை ஆகிய பகுதிகளில் இந்தியாவில் இருந்து அதிக அளவு வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது.
ஆனால் பிலிப்பைன்ஸ் வெங்காய தேவை அதிகம் இருந்தும் அந்த நாடு இந்தியாவை விட சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை விரும்பும் நிலை உள்ளது. வங்கதேசம் 4.7 லட்சம் டன்னும், மலேசியா 4.3 லட்சம் டன்னும், வளைகுடா நாடுகள் 3.93 லட்சம் டன்னும், இலங்கை 2 லட்சம் டன்னும் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளது.
சாகுபடி
இதேபோன்று வெங்காய சாகுபடியும் அதிகரித்து உள்ளது. மத்திய அரசின் விவசாயத்துறை நடப்பாண்டில் 10.76 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் வெங்காய சாகுபடி செய்வதற்கான இலக்கு நிர்ணயித்த நிலையில் தற்போது 11.8 லட்சம் எக்டேர் நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் முந்தைய ஆண்டு 11.67 லட்சம் எக்டேர் நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெங்காயத்தில் தரத்தை பொருத்தமட்டில் எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையே உள்ளது. தரம் குறைவாக இருந்தால் ஏற்றுமதியை பாதிக்கும் என கூறப்படுகிறது.
தரம் குறைந்தது
ஆனாலும் மழை காரணமாகவே வெங்காயத்தின் தரம் குறைந்துள்ளதாகவும், இதனை ஓரளவு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசின் விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெங்காய ஏற்றுமதி 64 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டு சந்தையில் போட்டி அதிகம் இல்லாத நிலையில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.