மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 636 பேர் கைது


மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 636 பேர் கைது
x

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 636 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 636 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு போன்றவற்றை கண்டித்தும், காலியாக உள்ள மத்திய அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோாிக்கை விடுத்தும் மத்திய அரசை கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை 11 மணியளவில் ரங்கசமுத்திரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து வடக்குப்பேட்டையில் உள்ள தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் தபால் அலுவலகம் முன்பாக செல்லும் ரோட்டில் கட்சி கொடியை ஏந்தியபடி அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கட்சியின் சத்தி நகர செயலாளர் ஜமேஷ் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க வக்கீல் செயராசு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தை சேர்ந்த குணா ஆகியோர் பேசினர்.

இந்தநிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 88 பேரை சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

கோபி

கோபி மொடச்சூர் ரோட்டில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த கோபி போலீசார் மறியலில் ஈடுபட்டு இருந்த 100 பெண்கள் உள்பட 150 பேரை கைது செய்தனர். பின்னர் கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அவர்களை தங்கவைத்தனர். முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோபி பஸ்நிலையத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானி

பவானியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து புதிய பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் வக்கீல் ப.மா.பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் டி.ஏ.மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். வக்கீல் ப.பா.மோகன் மத்திய அரசைக் கண்டித்து பேசினார்.

மாவட்ட குழு உறுப்பினர் சந்திரசேகர், நகர துணை செயலாளர் எம்.ஆர்.சுரேஷ் குமார், மாவட்ட குழு உறுப்பினர் பாலதண்டாயுதம், பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க பொறுப்பாளர் நாகராஜன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம் நெசவாளர் தொழிலாளர் சங்கம் செயலாளர் சித்தையன் உள்பட 70 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அனைவரையும் பவானி போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

ஜம்பை

இதேபோல் பவானி அருகே உள்ள ஜம்பையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே உள்ள ரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு வக்கீல் அருள் தலைமை தாங்கினார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 136 பேரை போலீசார் கைது செய்தனர்.

பவானிசாகர்

பவானிசாகரில் தபால் அலுவலகம் செல்லும் ரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 128 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அனைவரும் பவானிசாகர் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

இதேபோல் ஈரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 636 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story