சேலம் மாவட்டத்தில் 6,282 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் 6,282 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்களுக்கு மாதந்தோறும் உயர்கல்வி உறுதி தொகையாக ரூ.1,000 வழங்கப்படும்.
அரசு பள்ளியில் படிப்பு
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் கல்வி படித்திருக்க வேண்டும். 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ பயின்ற பெண் குழந்தைகள், 6-ம் வகுப்பு முதல் அரசுப் பள்ளியில் கல்வி படித்திருந்தால் அவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
அரசு மற்றும் கலை, தொழிற்கல்வி, டிப்ளமோ, பாராமெடிக்கல், ஐ.டி.ஐ., இளங்கலையுடன் இணைந்த முதுகலை கல்வி ஆகிய அனைத்து உயர்கல்வி படிப்புகளும் இத்திட்டத்தின் கீழ் பொருந்தும். முதல் 3 வருட காலத்திற்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெற இயலும். மேலும் ஒரு குடும்பத்தில் பிறந்த அனைத்து பெண் குழந்தைகளும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். இத்திட்டத்தின் கீழ் பயனடைய குடும்ப வருமான உச்ச வரம்பு கிடையாது.
6,282 மாணவிகள் தேர்வு
சேலம் மாவட்டத்தில் 6,282 கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதாந்திர உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கு இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகள் தேர்வு செய்யப்பட்டு தகுதியுடைய கல்லூரி மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் வருகிற 5-ந் தேதி முதல்-அமைச்சரால் மாநில அளவில் இத்திட்டம் தொடங்கப்படுவதையொட்டி அன்றைய தினமே சேலம் மாவட்ட அளவில் முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் பயனடையும் 898 கல்லூரி மாணவிகளுக்கு டெபிட் கார்டு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கல்லூரி கல்வித்துறை இணை இயக்குனர் ராமலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகநாதன், மாவட்ட சமூக நல அலுவலர்ரஞ்சிதாதேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.