கூடங்குளத்தில் 3, 4-வது அணுஉலைகள் அமைக்கும் பணி 62 சதவீதம் நிறைவு
கூடங்குளத்தில் 3, 4-வது அணுஉலைகள் அமைக்கும் பணி 62 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்று வளாக இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்தார்.
வள்ளியூர்:
'கூடங்குளத்தில் 3, 4-வது அணுஉலைகள் அமைக்கும் பணி 62 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது' என்று வளாக இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்தார்.
சுதந்திர தின விழா
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு வளாக இயக்குனர் பிரேம்குமார் தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து செட்டிகுளம் அணுவிஜய் குடியிருப்பு நகரியத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:-
கூடங்குளம் முதலாவது அணு உலை கடந்த ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் கடந்த ஜூலை 24-ந் தேதி வரை தொடர்ந்து 326 நாட்கள் இயங்கி சாதனை படைத்துள்ளது. இதே போன்று வரும் காலங்களிலும் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
ரூ.6,500 கோடி
கடந்த வருவாய் ஆண்டில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் மூலம் 83 சதவீதம் மின் உற்பத்தி நடந்துள்ளது. இந்த 2 அணு உலைகள் மூலம் 14 ஆயிரத்து 500 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த வருவாய் ஆண்டில் இந்திய அணுசக்தி கழக வருமானத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூலம் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணுசக்தி கழகத்தின் ஆண்டு வருவாயில் பாதி பங்கு கூடங்குளம் அணுமின் நிலையம் வகிக்கிறது என்பதில் நாம் அனைவரும் பெருமை அடைகிறோம்.
முழுவீச்சில் பணிகள்
கூடங்குளத்தில் மேலும் நான்கு அணு உலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில் 3, 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி 62 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. 5, 6-வது அணு உலைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் 29-ந் தேதி தொடங்கி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ரஷ்ய கூட்டமைப்பு தலைவர் இவானிஷவ் இவான், நிலைய இயக்குனர் ஷவந்த், 3, 4-வது அணுஉலை திட்ட இயக்குனர் சின்னவீரன், 5, 6-வது அணுஉலை திட்ட இயக்குனர் சுரேஷ், மத்திய தொழில் பாதுகாப்பு படை கமான்டன்ட் ஜிதேந்திரபாபு, மனித வள மேம்பாட்டு பொது மேலாளர் விஜயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.