வாடிவாசலில் இருந்து 610 காளைகள் சீறிப்பாய்ந்தன


வாடிவாசலில் இருந்து 610 காளைகள் சீறிப்பாய்ந்தன
x

கல்லாலங்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து 610 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை விலங்குகள் நலவாரிய ஆய்வுக்குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மிட்டல், ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை உதவி கலெக்டர் ஜெயாஸ்ரீ, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

610 காளைகள் சீறிப்பாய்ந்தன

அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 215 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 610 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

23 பேர் காயம்

காளைகள் முட்டியதில் 12 மாடுபிடி வீரர்கள், 10 காளைகளின் உரிமையாளர்கள், ஒரு பார்வையாளர் என மொத்தம் 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

பரிசு

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை காண புதுக்கோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் வந்து கண்டு களித்தனர்.

கோரிக்கை

ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்பதற்காக காளைகளின் உரிமையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு முறையாக டோக்கன் வழங்கப்படாமல், அதிகாரிகளின் உதவியோடு விழா கமிட்டியினர் தனியாக டோக்கன் அச்சடித்து, அதில் 10 ரூபாய் நோட்டை வைத்து சுமார் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்துள்ளனர். இதனால், ஆன்லைனில் பதிவு செய்த காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், இதுபோன்று விழா கமிட்டியினர் தனியாக டோக்கன் அச்சடித்து வழங்கி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story