600 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வந்தது
தூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 600 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வந்தது.
தஞ்சாவூர்;
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். இந்த ஆண்டும் வழக்கம்போல் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தியும், ஆழ்குழாய் கிணறு மூலமாகவும் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர். மேலும் ஆழ்குழாய் கிணறு மூலம் சம்பா சாகுபடி பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கு தேவையான உரம் வெளிமாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 10 வேகன்களில் 600 டன் பொட்டாஷ் உரம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.