600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கடையநல்லூர் அருகே 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் பகுதியில் ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு வந்த புகாரின் பேரில் குடிமைப் பொருள் தாசில்தார் மற்றும் கடையநல்லூர் போலீசார் ஆகியோர் ரேஷன் கடைகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கடையநல்லூர் இக்பால் நகர் தக்வா தெருவில் இரவு நேரங்களில் ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மூடைகளை தக்குவா தெரு அருகில் உள்ள முட்புதர்களில் பதுக்கி வைத்து விட்டு அதிகாலையில் மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது அப்பகுதி மக்கள் ரேஷன் அரிசி கடத்தல்காரர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். உடனே அவர்கள் அங்கு அரிசி மூட்டைகளை போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து 600 கிலோ எடையுள்ள 20 மூட்டைகளை மீட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.