மாவட்டம் முழுவதும் 600 சிலைகள் வைத்து வழிபாடு
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 600 சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தியை யொட்டி நேற்று நாடு முழுவதும் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் வீடு, பொது இடங்களில் சிலைகள் வைத்து பக்தா்கள் வழிபட்டனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள சக்தி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர், லிங்கத்துக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் விநாயகருக்கு அவல், பொரிகடலை, அச்சு வெல்லம், சர்க்கரை பொங்கல், கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் பழ வகைகள் ஆகியற்றை படைத்து மேள,தாளத்துடன் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
600 விநாயகர் சிலைகள்
அதேபோல் இதே பகுதியில் 10 அடி உயரத்தில் கற்பக விநாயகர் சிலைகள் மற்றும் காந்திரோடு, கிராமசாவடி தெரு, கவரைத்தெரு, ஏமப்பேர், அண்ணா நகர், சேலம் மெயின்ரோடு, கருணாபுரம், கோட்டைமேடு, ராஜாநகர், வ.உ.சி.நகர், விலாந்தாங்கல் ரோடு, கரியப்பநகர் உள்பட 90 இடங்களில் 5 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகளை வைத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் மட்டும் 150 விநயாகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் சுமார் 600 விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள், இளைஞர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள்.
நாளை கரைக்கப்படுகிறது
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை 3-வது நாளான நாளை(புதன்கிழமை) பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று அரசு அறிவித்துள்ள நீர் நிலைகளில் கரைக்க உள்ளனர்.
சங்கராபுரம்
ஒவொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று சங்கராபுரம் நகரில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு பின்னர் அந்த சிலைகளைஅப்பகுதியில் உள்ள ஏரியில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சங்கராபுரம் கடைவீதி சக்தி விநாயகர் கோவில், திரவுபதி அம்மன் கோவில், மீனவர் தெரு, வடக்கு தெரு, பங்களா தெரு, ஆற்றுப்பாதை தெரு, முதல்பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், பொய்க்குணம் சாலை, பூட்டைசாலை முருகன் கோவில், ஏரிக்கரை ஆகிய 10 இடங்களில் ஆள் உயர விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சின்னசேலம்
சின்னசேலம் நகரப்பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி ஆள் உயர விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அதில் விஜயபுரம் 4-வது தெரு 14 வது வார்டு பகுதியில் சிலையை வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்