நர்சிடம் அரிவாள் முனையில் 6½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு


நர்சிடம் அரிவாள் முனையில் 6½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

துவரங்குறிச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகுந்து நர்சிடம் அரிவாள் முனையில் 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

துவரங்குறிச்சி, ஜூன்.1-

துவரங்குறிச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகுந்து நர்சிடம் அரிவாள் முனையில் 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நர்சு

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே செவல்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இங்கு நந்தினி (வயது 28) என்பவர் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முத்தாழ்வார்ப்பட்டியை சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பிரசவம் முடிந்த பின்னர் சின்னப்பன் மருத்துவமனைக்கு வெளியே படுத்து இருந்தார். அப்போது நள்ளிரவில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 2 பேர் வந்தனர். அவர்கள் கீழே விழுந்து விட்டதாகவும், மருந்து போட வேண்டும் என்று நந்தினியிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர் காயம் எங்கே என்று கேட்டபோது, திடீரென முதுகின் பின்புறம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காண்பித்து மிரட்டி நந்தினி அணிந்து இருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடவே, அவரிடம் இருந்த செல்போனையும் பறித்தனர். இந்த சத்தம் கேட்டு வெளியே படுத்து இருந்த சின்னப்பன் உள்ளே ஓடிவந்தார். அவரையும் அந்த ஆசாமிகள் தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த செல்போனையும் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story