6 வயது மகனை கிணற்றில் தள்ளிக்கொன்ற பெயிண்டர்


6 வயது மகனை கிணற்றில் தள்ளிக்கொன்ற பெயிண்டர்
x
தினத்தந்தி 23 Aug 2023 12:30 AM IST (Updated: 23 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் பெயிண்டர் தனது 6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்தார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் பெயிண்டர் தனது 6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்தார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிறுவன் உடல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்துள்ள நவாசாலையில் ஒருவரது தோட்டம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் பார்த்த போது சிறுவன் உடல் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து சிவகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கிணற்றில் இறங்கி சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் குறித்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மாயமான சிறுவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

பரபரப்பு தகவல்கள்

போலீசாரின் விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சிவகிரி அருகே உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 45), பெயிண்டர். இவரது மனைவி கார்த்தீஸ்வரி (40). இவர்களது மகன் மகிழன் (6). இவன் தென்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

முனியாண்டிக்கு தனது மனைவி நடத்தையில் அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

பள்ளிக்கு சென்று மகனை அழைத்தார்

பின்னர் வீட்டில் இருந்து வெளியேறிய முனியாண்டி தனது மகன் மகிழன் படிக்கும் பள்ளிக்கு சென்றார். மகிழனுக்கு மிட்டாய் வாங்கித்தருவதாக அழைத்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

பின்னர் மகிழன் பள்ளிக்கும், வீட்டிற்கும் செல்லவில்லை. முனியாண்டியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்தீஸ்வரி சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கிணற்றில் தள்ளி கொலை

இந்த நிலையில் முனியாண்டி டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு நவாசாலையில் உள்ள தோட்டத்திற்கு மகனுடன் சென்றார். அங்கு வைத்து மது அருந்திய முனியாண்டி தனது மகன் என்றும் பாராமல் மகிழனை கிணற்றில் தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் தண்ணீரில் மூழ்கிய சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இந்த கொலையில் ஈடுபட்ட முனியாண்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இ்வ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வலைவீச்சு

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார், தப்பி ஓடிய முனியாண்டியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிவகிரி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் 6 வயது மகனை கிணற்றில் தள்ளி தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story