தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 6 ஆயிரம் பேர் காத்திருப்பு - ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி


தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 6 ஆயிரம் பேர் காத்திருப்பு - ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி
x

தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மட்டுமே 6 ஆயிரம் பேர் காத்திருப்பதாக அரசு டாக்டர் தெரிவித்துள்ளார்.

908 சிறுநீரகங்கள் தானம்

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இந்த ஆண்டில் மட்டும் 27 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சிறுநீரகவியல் துறையின் தலைவர் டாக்டர் பிரகாஷ் கூறியதாவது:-

இந்தியாவிலேயே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. இந்த ஆண்டில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற 27 சிறுநீரக மாற்று சிகிச்சையில் 19 சிகிச்சைகள் நோயாளிகளின் முதல்தர உறவினர்களின் மூலம் தானமாக பெறப்பட்ட சிறுநீரகத்தை கொண்டு நடைபெற்ற சிகிச்சைகளாகும். மற்ற 8 சிகிச்சைகள் மூளைச்சாவின் மூலம் உயிரிழந்த நபர்களிடம் இருந்து சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு நடந்தவைகள் ஆகும்.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில், இதுவரை 908 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. இந்த சிகிச்சைகளுக்காக மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து 143-ம், முதல்தர உறவினர்களிடம் இருந்து 765-ம் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலத்தில் குறைந்தது

இதற்கிடையே கொரோனா பேரிடர் காலத்தில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தானமளிக்கும் கொடையாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து இருந்தது. அந்தவகையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 2020-ம் ஆண்டு 8 சிறுநீரக மாற்று சிகிச்சைகளும், 2021-ம் ஆண்டு 14 சிறுநீரக மாற்று சிகிச்சைகளும் மட்டுமே நடைபெற்று இருந்தன.

கொரோனாவின் தாக்கம் குறைந்த பின்னர், சிறுநீரக தானம் அளிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, இந்த ஆண்டில் தற்போது வரை 27 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

காத்திருப்போர் 6 ஆயிரம்

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியின் 'டீன்' டாக்டர் பாலாஜி கூறுகையில், 'சிறுநீரக நோயுக்கு 'டயாலிசிஸ்' மூலம் 5 ஆண்டுகள் வரை சிகிச்சையை நீட்டிக்கலாமே தவிர, அது நிரந்தர தீர்வு அல்ல. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதே சிறந்ததாகும். மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நபரின் தேவைகளுக்கு ஏற்ப 1 அல்லது 2 ஆண்டுக்குள் பொருத்தமான சிறுநீரகம் கிடைக்கபெற்றால், மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

தற்போது தமிழகத்தில் 6 ஆயிரம் பேர்களுக்கு மேல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் காத்திருக்கின்றனர். இதுபோன்று எதிர்பாராத நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நோயாளிகளுக்கு, அவரது உறவினர்கள் உதவ முன்வர வேண்டும். ரத்த தானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போல் உடல் உறுப்பு தானத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்' என கூறினார்.


Next Story