6 பேர் விடுதலையும், மக்கள் மனநிலையும்... சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து


6 பேர் விடுதலையும், மக்கள் மனநிலையும்... சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து
x

1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்யவந்த இடத்தில், ஸ்ரீபெரும்புதூரில் வைத்து மனிதவெடிகுண்டு தாக்குதலில் அந்தத் துயரச் சம்பவம் அரங்கேற்றப்பட்டது.

உலகை உலுக்கிய அந்தக் கொலையில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட தாணு என்ற பெண் உடல் சிதறிப் பலியானார். முக்கிய குற்றவாளியான ஒற்றைக்கண் சிவராசன் சைனைடு தின்று தற்கொலை செய்துகொண்டார்.

தூக்குத்தண்டனை

*இந்த வழக்கில் 41 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா ஆகிய 3 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 12 பேர் தற்கொலை செய்துகொண்டனர். மீதமுள்ள 26 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

*1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந் தேதி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கும் தூக்குத்தண்டனை விதித்தது. அனைவரும் மேல் முறையீடு செய்தனர்.

*1999-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி அதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 26 பேர்களில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு தூக்குத்தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சண்முகவேலு என்பவர் விடுவிக்கப்பட்டார். அதுபோல் மீதம் உள்ள 18 பேரும் சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாகக் கருதி விடுவிக்கப்பட்டனர்.

எஞ்சிய 7 பேர்

தூக்குத்தண்டனை பெற்ற நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன், ஆயுள்தண்டனை பெற்ற ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் விடுதலை பெறுவதற்காக சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

* 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு செய்து இருந்தார்கள். அந்த மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன.

கருணை மனுக்கள் காரணம் இல்லாமல் நிலுவையில் இருந்ததால் 2014-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி அவர்களின் மரணதண்டனையை நீதிமன்றம் ரத்துசெய்தது.

2022-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

31 ஆண்டுகள் சிறை, சிறையில் நன்னடத்தை, கருணை மனு மீது முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது போன்றவற்றை காரணம் காட்டி, அரசியல் சாசனம் நீதிமன்றத்துக்கு வழங்கிய சிறப்பு அதிகாரம் 142-வது பிரிவைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்தது.

விடுதலை

பேரறிவாளன் விடுதலையை அடிப்படையாக வைத்து, நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ் ஆகிய 6 பேரும் தங்களை விடுதலை செய்யுமாறு சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டு இருந்தனர்.

அவர்களின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 6 பேரையும் நேற்று அதிரடியாக விடுதலை செய்தது.

அவர்களின் விடுதலை குறித்து பொதுமக்களும், சட்ட வல்லுனர்களும் பாதிக்கப்பட்டவர்களும் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

தயங்கியது ஏன்?


ஐகோர்ட்டு வக்கீல் தமிழ்மணி:- நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கலாம் என அமைச்சரவை முடிவெடுத்த பின்பு அதை கவர்னர் மறுக்கவோ அல்லது எந்தவித முடிவும் எடுக்காமலோ இருக்க முடியாது என்பதை பேரறிவாளனை விடுவித்த போதே சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறிவிட்டது. பேரறிவாளனை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதும் மற்ற 6 பேரையும் ஒரு அரசாணை மூலம் தமிழக அரசு விடுவித்து இருக்க முடியும். ஆனாலும், தமிழக அரசு அதில் உரிய முடிவெடுக்க தயங்கியது ஏன் என தெரியவில்லை. நன்னடத்தை மற்றும் கருணை அடிப்படையில் இவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள்தான். அதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்திருப்பது 100 சதவீதம் வரவேற்கத்தக்கது.




வக்கீல் மோனிகா:- தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். நளினி உள்ளிட்டோரை விடுவிக்கும் விவகாரத்தில் ஒரு தீர்க்கமான முடிவு சம்பந்தப்பட்டவர்களால் முன்கூட்டியே எடுத்திருக்கப்பட வேண்டும். தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டியவர்கள் செய்த காலதாமதத்தை பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதித்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் நீண்டகாலமாக இவர்களது விடுதலை தள்ளிப்போய் விட்டது. இது அவர்களது தனிமனித உரிமையை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இதுபோன்ற விவகாரங்களில் கவர்னராக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி விரைந்து தீர்வு காண வேண்டும்.

வரையறை கொண்டுவரப்பட வேண்டும்



ஐகோர்ட்டு வக்கீல் திருமுருகன்:- தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது கவர்னர் விரைந்து முடிவெடுத்திருந்தால் நளினி உள்ளிட்டோர் விடுதலையில் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டிருக்காது. 1981-ம் ஆண்டு மாருராம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கிருஷ்ணய்யர், கவர்னர் விரும்புகிறாரோ இல்லையோ மாநில அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று நடக்க கடமைப்பட்டவர் என்றும், அமைச்சரவை தீர்மானத்தின் மீது கவர்னரிடம் கையெழுத்து பெறுவது என்பது ஒரு சம்பிரதாய நடவடிக்கை மட்டுமே என்றும் தீர்ப்பு கூறி உள்ளார். இந்த தீர்ப்புகளை எல்லாம் சுட்டிக்காட்டிய போதும் அமைச்சரவை தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவெடுக்க தாமதப்படுத்தி வந்ததன் விளைவு நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அமைச்சரவை தீர்மானத்துக்கு பின்பும் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுபோன்ற செயல் மாநிலங்களின் உள்ளார்ந்த அதிகாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுபோன்ற சட்டச்சிக்கல்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ளன. எனவே, அமைச்சரவை தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குள் கவர்னர் உரிய முடிவெடுக்க வேண்டும் என்ற சட்ட வரையறை கொண்டுவரப்பட வேண்டும்.




வக்கீல் ஸ்ரீலேகா:- இந்த வழக்கை பொறுத்தமட்டில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் குற்றவாளிகள்தான். இது நீதிமன்ற தீர்ப்பு. இதில், எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். கருணை வழங்குவதாக இருந்தாலும் அதை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்குவதுதான் சரியாக இருக்கும். ராஜீவ்காந்தி கொலையாளிகளை பொறுத்தமட்டில் நீண்டகாலமாக அவர்கள் சிறையில் இருப்பதையும், நன்னடத்தையையும் கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு தனது வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுவித்துள்ளது. பொதுவாகவே தண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னித்து விடுவிப்பதில் மாநில அரசை பொறுத்தமட்டில் கவர்னருக்குதான் அதிகாரம் உள்ளது. நளினி உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில் கவர்னர் முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதுபோன்ற சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் பொதுமக்கள் விவகாரத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

ராஜகுருவின் மனைவி



குண்டுவெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி பாலசரஸ்வதி:-எல்லோரும் ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையை கொண்டாடுகிறார்கள். அந்த நாளில் இளம் வயது போலீஸ் அதிகாரியாக இருந்த என் கணவர், என்னையும், எனது மகன், மகளையும் சிறுவயதிலேயே தவிக்கவிட்டு காலமாகி விட்டார். என்னை போன்று இன்னும் பலர் குடும்பங்களை இழந்து தவிர்க்கிறார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். காவல்துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றி எல்லோரது பாராட்டையும் பெற்ற என் கணவர், உயிரோடு இருந்திருந்தால் உயர் பதவியை அலங்கரித்திருப்பார். அவரது மரணம் காவல்துறைக்கு இழப்பு. என்னுடைய குடும்பத்துக்கும் பேரிழப்பு. பாதிக்கப்பட்ட எங்களை பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?

இந்த கொலைக்கு காரணமாக இருந்தவர்களை வரவேற்று அறிக்கை தருகிறவர்கள், ராஜீவ்காந்தியோடு சேர்ந்து இறந்து போன 16 பேரில் ஒருவருக்காவது ஒரு சொட்டு கண்ணீர் விட்டது உண்டா? பாதிக்கப்பட்ட என்னை போன்ற குடும்பத்தினருக்கு இந்த சமுதாயம் என்ன பதில் சொல்லப்போகிறது?

டி.எஸ்.பி. அனுசுயா


குண்டுவெடிப்பில் காயமடைந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. அனுசுயா:- இப்போதும் எனது உடலில் பல இடங்களில் குண்டு புகுந்த காயம் இருக்கிறது. இந்த வேதனையில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் தற்போது வரை மீளவில்லை. பலரது வாழ்க்கை சீரழிந்து போனது. நாங்கள் தினம் தினம் வேதனையால் துடித்துக்கொண்டிருக்கும் போது கொலையாளிகள் விடுதலையை பலர் கொண்டாடுகிறார்கள். எங்கள் வலியையும் வேதனையையும் யாரும் மதிப்பதில்லை.



சமூக ஆர்வலர் அய்யா:- யார் தவறு செய்தாலும் அவர்களுக்கென அளிக்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்தை அனுபவித்துவிட்ட நிலையில் நீண்டகாலமாக சிறையில் இருந்து வருகின்றனர். மன்னிப்பு என்பது தமிழர்களின் பண்பாடு. அந்த அடிப்படையில்தான் நளினி உள்ளிட்டோர் குறிப்பிட்ட காலம் சிறை தண்டனையை அனுபவித்துவிட்ட நிலையில் தொடர்ந்து அவர்கள் சிரமங்களை சந்தித்து வருவதை கருத்தில்கொண்டு அவர்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பது பெரும்பாலான தமிழர்களின் கருத்தாக இருந்து வந்தது. அது, தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மூலம் நிறைவேறி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story