முன்விரோத தகராறில் கோஷ்டி மோதல்-சாலைமறியல்6 பேர் கைது


முன்விரோத தகராறில் கோஷ்டி மோதல்-சாலைமறியல்6 பேர் கைது
x

முன்விரோத தகராறில் கோஷ்டி மோதலை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியல் நடந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

முன்விரோத தகராறில் கோஷ்டி மோதலை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியல் நடந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கலசபாக்கத்தை அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவின்போது காளை விடும் விழா நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் சிலர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்திருந்தனர்.

இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக இருதரப்பினருக்கு இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையின்போது ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் ஒரு தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு தரப்பினர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் ஒரு தரப்பை சேர்ந்த சிலர் காயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகராறுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி திடீரென நள்ளிரவில்ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கூடுதல் துணை சூப்பிரண்டு ஸ்டீபன், போளூர் துணை போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் மற்றும் கடலாடி போலீசார், ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் அடிப்படையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சசிகுமார், சிதம்பரம், கவியரசு, மற்றும் தினேஷ், அருண், அஜித்குமார் ஆகிய 6 பேரை கடலாடி போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்படி ஆதமங்கலம் புதூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story