பழையாறு பக்கிங்காம் கால்வாயில் 6 புதிய கதவணைகள்


பழையாறு பக்கிங்காம் கால்வாயில் 6 புதிய கதவணைகள்
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே கடலோர பக்கிங்காம் கால்வாயில் 6 புதிய கதவணைகள் கட்டப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

6 கதவணைகள்

கொள்ளிடம் அருகே பழையாறு, புதுப்பட்டினம், தற்காஸ், கலைஞர் நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய கிராம பகுதிகளை ஒட்டி பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் கடல்நீர் அதிக அளவில் புகும்போது பழையாறு சுனாமி நகர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்வதோடு, ஆயிரத்துகும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களிலும் உப்பு நீர் புகுந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதுகுறித்து கடலோர பகுதி விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் சார்பில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் கதவணைகள் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோரிக்கை ஏற்கப்பட்டு கலெக்டர் மகாபாரதி உத்தரவின்பேரில் மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் நடவடிக்கை எடுத்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் பக்கிங்காகாம் கால்வாய் கரையில், மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 இடங்களில் கதவணைகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கடைமடை பாசனதாரர் சங்க தலைவர் விஜய கோதண்டராமன் கூறுகையில், பக்கிங்காம் கால்வாயில் கதவணை அமைக்காமல் இருந்ததால் பழையாறு சுனாமிநகர் புதுப்பட்டினம், தற்காஸ், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் உப்பு நீர் புகுந்து நெற்பயிர்கள் பெரிதும் சேதமடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளும் பாதிப்புக்கு உள்ளானது. தற்போது பக்கிங்காம் கால்வாயில் 6 இடங்களில் கதவணை அமைத்துள்ளதால் எங்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட செயற்பொறியாளர், சீர்காழி உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி இப்பகுதி மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மேலும் கதவணை அமைக்கப்பட்டுள்ள பக்கிங்காம் கால்வாய் கரையில் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு கதவணையை உரிய நேரங்களில் சென்று மூடி திறக்கவும், பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் எளிதில் சென்று வரும் வகையில் தார்ச்சாலை அமைக்கத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


Next Story