953 பேருக்கு ரூ.6¾ கோடி கடன் உதவி; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்


953 பேருக்கு ரூ.6¾ கோடி கடன் உதவி; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
x

நெல்லையில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 953 பேருக்கு ரூ.6 கோடியே 63 லட்சம் கடன் உதவியை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி

நெல்லையில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 953 பேருக்கு ரூ.6 கோடியே 63 லட்சம் கடன் உதவியை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

கூட்டுறவு வாரவிழா

69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி வரவேற்றார். துணைப்பதிவாளர் முத்துசாமி கூட்டுறவு உறுதிமொழி வாசித்தார். நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி திட்ட விளக்க உரையாற்றினார்.

சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் பரிசு வழங்கினார். மேலும் 953 பேருக்கு ரூ.6 கோடியே 63 லட்சம் கடன் உதவி வழங்கினார். விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

பெண் கல்விக்கு முக்கியத்துவம்

அவர் பேசுகையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களையும் இந்த அரசு செய்து வருகிறது. அந்த காலத்தில் பெண்கள் கல்வி அறிவு இல்லாமல் இருந்து வந்தனர். அவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், பெண்களின் விடுதலைக்காகவும் திராவிட இயக்கம் பாடுபட்டது. தொடர்ந்து தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பெண்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திருமண உதவித்தொகையை திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் பெண்கள் கல்வி உயர்ந்து வந்தது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் நவீன கல்வியை உருவாக்கி உள்ளார். தற்போது பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று உற்பத்தி விலையை 3 ரூபாய் உயர்த்தியுள்ளார். கறவை மாடு வாங்க ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2¾ கோடி பேருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே ஆவின், சிறந்த பால் விற்பனை நிலையமாக செயல்பட்டு வருகிறது என்றார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story