மும்பையில் இருந்து சென்னைக்கு உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.6 கோடி தங்கம் பறிமுதல்


மும்பையில் இருந்து சென்னைக்கு உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.6 கோடி தங்கம் பறிமுதல்
x

மும்பையில் இருந்து சென்னைக்கு உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 14 கிலோ எடைகொண்ட ரூ.6 கோடி தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை

சென்னை சவுகார்பேட்டை ஆதியப்பன் தெருவில் நேற்று முன்தினம் இரவு யானை கவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பேர் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிவதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

பின்னர் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது, அதில் கிலோக்கணக்கில் பல்வேறு டிசைன்களில் தங்க வளையல், மோதிரம், கைக்கெடிகாரம் ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில், 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அதில் பிடிபட்டவர்கள் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த முகேஷபவர்லால் ஜெயின் (வயது 49), சிக்கந்தன் (39) என்பதும், இவர்கள் இருவரும் மும்பையில் இருந்து நகைகளை மொத்தமாக வாங்கி வந்து சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் நகைகளை கொண்டு வந்ததற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லாததால் சந்தேகம் அடைந்த போலீசார் ரூ.6 கோடி மதிப்பிலான 14 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்டவர்களையும் தங்க நகைகளையும் யானை கவுனி போலீசார் சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். நகைகளை பெற்றுக் கொண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் 2 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story