6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிப்பு:தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு


6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிப்பு:தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
x

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும்1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திருவண்ணாமலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அன்று தகர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக பஸ்-ரெயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவது வழக்கம்.சமீபத்தில் கோவையில் கார் வெடிப்பு சம்பவம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாலும், பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று கார்த்திகை தீப திருவிழாவும் வருவதால் இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளனர்.

அதன்படி பஸ்-ரெயில் நிலையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் போலீஸ் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட இருக்கிறது. பயணிகள் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படும். மோப்ப நாய்களும் ரெயில் நிலையங்களை சுற்றி வலம் வரும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் மிக உன்னிப்பாக கவனிப்பார்கள்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 6-ந்தேதி நடைபெறும் தீபத்திருவிழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

எனவே அங்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக மேற்கொண்டு வருகிறார். அனுமதிச்சீட்டு இருக்கும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கார்த்திகை தீபத்தன்று இந்த கோவில் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளது. இதனால் அங்கு உச்சக்கட்ட கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் போலீசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். ரோந்து பணிகளையும், இரவு நேர வாகன தணிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் 15 போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். இதே போன்று தாம்பரம், ஆவடி கமிஷனரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது. கார்த்திகை தீப திருவிழா நடைபெறும் திருத்தலங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 28 ஆண்டுகள் நடந்த வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின்னர் பாபர் மசூதி தின அனுசரிப்பு நிகழ்வு பரபரப்பு இல்லாமல் இருந்து வந்தது. எனவே போலீசார் பெயரளவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story