கடந்த 7 நாட்களில் 57,192 டன் குப்பைகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை மாநகராட்சி முழுவதும் குப்பைகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 'மிக்ஜம்' புயல் மற்றும் கனமழை வெள்ள பாதிப்பினால் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி கல்லூரி சான்றிதழ் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் மீண்டும் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் கடந்த 12-ந்தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட 119-வது வார்டு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமையும், ராயபுரம் மண்டலம் வெங்கடேசன் தெருவில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றுதல் மற்றும் பொது குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் பணிகளை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
"கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்தல், நிவாரணப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையில் 50 ஆயிரத்து 659 மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகள் மற்றும் 6 ஆயிரத்து 533 மெட்ரிக் டன் தோட்டக்கழிவுகள் என 57 ஆயிரத்து 192 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
மேலும், மழைநீர் வடிந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட மழைக்கால சிறப்பு நிலையான மருத்துவ முகாம்களாகவும், நடமாடும் மருத்துவ முகாம்களாகவும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல, மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு தனி கவனம் செலுத்தி, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை உள்பட்ட பகுதிகளில் தற்பொழுது அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது."
இவ்வாறு அவர் கூறினார்.