ரூ.5.59 கோடியில் கடனுதவிகள்
கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் ரூ.5.59 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் ரூ.5.59 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
கூட்டுறவு வார விழா
கிருஷ்ணகிரியில் நேற்று அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடந்தது. தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் வரவேற்றார். தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சந்தானம் திட்ட விளக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி, குத்துவிளக்கேற்றி கூட்டுறவு வார விழாவை தொடங்கி வைத்து, 578 பேருக்கு ரூ.5 கோடியே, 59 லட்சத்து, 30 ஆயிரத்து, 600 ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-
போதிய நிதி ஒதுககீடு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன், விவசாய நகைக்கடன், சிறுவணிக கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், டாப்செட்கோ கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், ஆதாரக்கடன் உள்ளிட்டவற்றை வழங்கி பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வழிவகை செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நடப்பாண்டில், 220 கோடி ரூபாய் பயிர்க்கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13,099 விவசாயிகளுக்கு, 111.35 கோடி ரூபாய் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய கட்டிடங்கள்
முன்னதாக, ரூ.95 லட்சம் மதிப்பில் கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க குளிர்பதன கிடங்கு, போச்சம்பள்ளியில், ரூ.34.20 லட்சம் மதிப்பில் ஏலக்களம் மற்றும் உலர்களம், மேச்சேரி கொட்டாய் மற்றும் அகசிப்பள்ளி ஆகிய இடங்களில் பகுதிநேர ரேஷன் கடை, கெலமங்கலம் என்.ஜி.ஜி.ஓ., காலனியில் முழு நேர ரேஷன் கடை உள்ளிட்டவற்றை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
இதில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.முருகன், கே.ஆர்.கே.நரசிம்மன், மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், நகர தி.மு.க. செயலாளர் நவாப் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.