கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு 550 கன அடி நீர் வருகை


கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு 550 கன அடி நீர் வருகை
x

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு 550 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

திருவள்ளூர்

550 கன அடி வருகை

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் 2 தவணைகளாக 12 டி.எம்.சி. நீரை ஆந்திர மாநில அரசு, கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும் என்பது கிருஷ்ணா நதி திட்டத்தின் கீழ் போடப்பட்ட ஒப்பந்தமாகும். அதன்படி நடப்பாண்டுக்கான 2-ம் தவணை நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு 550 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.

குடிநீர் வழங்கும் ஏரிகளில், 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1,064 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 132 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3 ஆயிரத்து 80 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 442 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 50 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 132 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

8 டி.எம்.சி. சேமிப்பு

பூண்டி ஏரியில் 32.93 சதவீதமும், சோழவரம் ஏரியில் 12.21 சதவீதமும், புழல் ஏரியில் 93.33 சதவீதமும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 88.40 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 83.68 சதவீதமும், வீராணம் ஏரியில் 9 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 59.75 சதவீதம் இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.). தற்போது 7 ஆயிரத்து 900 மில்லியன் கன அடி (சராசரியாக 8 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் மட்டும் சராசரியாக 88 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து 831 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 5 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 213 கன அடியும், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியில் இருந்து 15 கன அடியும் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 175 கன அடி வீதம் திறக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து வெறும் 7 டி.எம்.சி. நீர் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகருக்கு மாதம் 1 டி.எம்.சி. குடிநீர் தேவைப்படும் நிலையில் தற்போது இருக்கும் நீர் மூலம் அடுத்த 8 மாதத்துக்கு நிலைமையை சமாளிக்க முடியும். அதன்பிறகு வடகிழக்கு பருவ மழை மூலம் கூடுதலாக நீரை சேமிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story