55 கிலோ குட்கா பறிமுதல்
குத்தாலம் அருகே ஸ்கூட்டரில் கடத்தப்பட்ட 55 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குத்தாலம்;
குத்தாலம் அருகே ஸ்கூட்டரில் கடத்தப்பட்ட 55 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வாகன சோதனை
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளுக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா குட்கா கடத்துபவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அரும்பாக்கம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
கைது
சோதனையில் ஸ்கூட்டரில் 55 கிலோ எடையுள்ள கூல்லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீசார் குட்கா பொருட்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா பொருட்களை கடத்தி வந்த காரைக்கால் நெடுங்காடு காமராஜ் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா(வயது45), நெடுங்காடு பொன்பேத்தி பகுதியை சேர்ந்த மணிமாறன்(50) ஆகியோ ரை கைது செய்து விசாரணை செய்தனர்.விசாரணையில் இவர்கள் இருவரும் காரைக்காலில் இருந்து குட்கா பொருட்களை மயிலாடுதுறை மாவட்டம் கடலி கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் பொன்னரசன்(27) கடைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பொன்னரசனையும் கைது செய்தனர். குட்கா கடத்தல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.