நெல்லை மாநகரில் மேலும் 500 கண்காணிப்பு கேமராக்கள்
நெல்லை மாநகரில் மேலும் 500 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் கூறினார்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக தாமிரபரணி ஆற்றுப்பகுதி, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, சந்திப்பு பகுதிகளில் மொத்தம் 33 கேமராக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கும் வகையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் அகன்ற டிவி அமைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சிகளை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், "நெல்லை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், அனைத்து காட்சிகளையும் துல்லியமாக பதிவு செய்யும் வகையில் மேலும் 500 கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. நெல்லை மாநகராட்சி நிதி மூலம் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது" என்றார்.
இந்த ஆய்வின்போது மாநகர போலீஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் உலகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் விக்னேஸ்வரன், சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.