அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சிவகங்கையில் கடையடைப்பு-ரெயில் மறியல்


அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சிவகங்கையில் கடையடைப்பு-ரெயில் மறியல்
x
தினத்தந்தி 24 Sept 2023 3:30 AM IST (Updated: 24 Sept 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று ரெயில் மறியல், கடையடைப்பு நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கையில் கடையடைப்பு

ரெயில்வே தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை நகரில் நேற்று கடையடைப்பு மற்றும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சிவகங்கை நகர் அனைத்து கட்சிகள், வர்த்தக சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், பொது நல அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை நேற்று நடத்தின.

காரைக்குடியில் இருந்து சென்னை வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீட்டித்து சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டை-தாம்பரம் ரெயில் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும்.

செங்கோட்டையில் இருந்து சென்னை வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். ராமேசுவரம்-வாரணாசி, ராமேசுவரம்-அயோத்தி, ராமேசுவரம்-அஜ்மீர், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும்.

ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று சிவகங்கை நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

ரெயில் மறியல்

சிவகங்கை நகரசபை தலைவர் துரை ஆனந்த் தலைமையில் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு சிவகங்கை ரெயில் நிலையத்துக்கு சென்றனர். அங்கு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட தயாராகினர்.

அப்போது திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கி நேற்று காலை ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது.

அந்த ரெயிலை சிவகங்கை ரெயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாகவே அதில் பயணித்தவர்களில் சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினர்.

ரெயில் நின்றதும் ரெயிலில் இருந்தவர்களில் பலர் இறங்கி, ரெயில் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்தினர்.

500 பேர் கைது

தொடர்ந்து அந்த ரெயில் சிவகங்கை ரெயில் நிலையம் வந்ததும் ரெயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள் ரெயில் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் சுமார் 20 நிமிடம் நீடித்தது.

அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை தனியார் மண்டபத்தில் வைத்து, மாலையில் விடுவித்தனர்.


Next Story