நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் -அமைச்சர் அறிவிப்பு


நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் -அமைச்சர் அறிவிப்பு
x

நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 100 தொழில் முனைவோர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை,

நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு 100 நாட்டு கோழிப் பண்ணை அலகுகள் அமைக்க 50 சதவீத மானியத்தில் ரூ.1 கோடியே 80 லட்சம் செலவில் வழங்கப்படும்.

கால்நடைகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான துறை சார்ந்த பண்ணைகளில் உயர் மரபுத்திறன் கொண்ட புதிய கால்நடைகளை அறிமுகம் செய்யும் பொருட்டு 2,490 கால்நடைகள் ரூ.2 கோடியே 61 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

ஜல்லிக்கட்டு காளைகள்

ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தாமல் மின்னணு முறையில் அடையாளம் கண்டு அவற்றை பதிவு செய்யவும், ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை ஆன்லைன் அமைப்பு மூலம் பதிவு செய்யவும் அனுமதி அளிக்கவும் ரூ.87 கோடி செலவில் இணைய முகப்பு உருவாக்கப்படும். உள்நாட்டு நாய் இனங்களில் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையம் சென்னையில் ரூ.5 கோடியே 95 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்படும்.

பால் உற்பத்தியை பெருக்குவதற்காக பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து குச்சிகளை பயன்படுத்தி, அதிக கிடேரிக் கன்றுகள் கிடைக்க வழி வகை செய்யப்படும். 3 ஆண்டுகளில் 2.14 லட்சம் கிடேரி கன்றுகள் உற்பத்தி செய்யப்படுவதால் மாநிலத்தில் பால் உற்பத்தி பெருக்கப்படும்.

உதவி மருத்துவர் நியமனம்

முதல்-அமைச்சரின் திராவிட மாடல் அரசு, எல்லாருக்கும் எல்லாமும் என்ற சமதர்ம தத்துவத்தை கால்நடை வளர்ப்புத் தொழில் மூலம் ஊக்குவித்து வருகிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது, கால்நடை பராமரிப்புத் துறையில் பெரும்பாலான மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருந்தன. துறையின் அன்றாட பணிகள் மேற்கொள்ளுவதே சிரமமாக இருந்த சூழ்நிலையில், 1,141 கால்நடை உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். கால்நடை பராமரிப்பு துறையின் வரலாற்றில் இதுவரை ஒரே நேரத்தில் 1,141 கால்நடை உதவி மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதில்லை.

நாட்டுக்கோழி உற்பத்தி

நாட்டுக்கோழிகளின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைப்பதில் பல சிரமங்கள் உள்ளன.

இந்த நிலையை போக்கும் விதமாக குஞ்சு பொரிப்பகத்துடன் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க நெல்லையில், அபிஷேகப்பட்டி கால்நடைப் பண்ணையிலும், சிவகங்கையில் கால்நடைப் பண்ணையிலும் ஆண்டிற்கு 9 லட்சம் கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் வகையில் குஞ்சு பொரிப்பகத்துடன் கூடிய தாய்க்கோழி பண்ணைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சிவகங்கையில் செட்டிநாடு கால்நடைப் பண்ணையில் ஆண்டிற்கு 2 ஆயிரம் டன் கோழித் தீவனம் உற்பத்தி செய்யும் ஆலையும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story