வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை
வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோா்ட்டு தீர்ப்பளித்தது
ஸ்ரீவில்லிபுத்தூர். ஜூலை.5-
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் வேல்முருகன்(வயது 36). இவர் கடந்த 7.5.2016 அன்று தனது மோட்டார் சைக்கிளில் ஈஞ்சார் விளக்கு பகுதியில் சென்றபோது சிவகாசியை சேர்ந்த அழகுராஜ் (19), பாலசங்கர்(19), கருப்பசாமி(22) ஆகியோர் லிப்ட் கேட்பது போல் வேல்முருகனை நிறுத்தி சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் செயின் மற்றும் ரூ.ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.130-ஐ் பறித்து சென்றனர். இதுகுறித்து வேல்முருகன் மல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வன் ஜேசுதாஸ், கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அழகுராஜூக்கு ரூ.6500 அபராதமும், மற்ற இருவருக்கும் ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.