கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 5 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் ஆஜர்
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 5 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
சென்னை,
சென்னை மாநகராட்சியுடன், மடிப்பாக்கம் பகுதி கடந்த 2011-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்து சென்னை ஐகோர்ட்டு, பாதாள சாக்கடை அமைக்கும் பணியை 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று அய்யம்பெருமாள் கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.
ஆஜராக வேண்டும்
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர், 2019-ம் ஆண்டு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்தில் பதவி வகித்த உயர் அதிகாரிகள் அனைவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்தின் செயலாளராக 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பணியாற்றிய ஹர்மந்தர் சிங், தற்போது இப்பதவியை வகிக்கும் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் ஆஜராகினர்.
பணி தொடங்கியது
இந்த காலக்கட்டத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய டி.என்.ஹரிஹரன், சி.விஜயராஜ்குமார், தற்போது இப்பதவியை வகித்து வரும் கிர்லோஸ் குமார் ஆகியோர் ஆஜராகினர். இந்த 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர்.
இவர்கள் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை தொடங்கி விட்டதாக கூறி, அதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார். இந்த பணி 30 வாரத்துக்குள் முடிக்கப்படும் என்றும் கூறினார்.
முடித்து வைப்பு
இதற்கு மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்பகுதியில் வசிக்கும் தனக்கு இந்த பணி தொடங்கியதே தெரியாது என்று கூறினார்.
அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர். பின்னர் நீதிபதிகள், "இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மீண்டும் வரக்கூடாது. அதற்கு ஏற்ப நீங்கள் செயல்பட வேண்டும். உங்களை வரவழைக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம் இல்லை. ஒரு திட்டத்தை உருவாக்கி, அதை இந்த காலக்கட்டத்துக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டத்தை வகுக்கும் நீங்கள், அதை ஏன் முறையாக மேற்கொள்வது இல்லை? திட்டம் குறித்து கீழ் நிலை அதிகாரிகளிடம் வாரம் ஒரு முறையாவது ஆலோசனை செய்து, முறையான ஆய்வுகளை செய்யுங்கள்" என்று அறிவுரை வழங்கினர்.