5 ரெயில் நிலைய நடைமேடைகளில் மேற்கூரை
5 ரெயில் நிலையங்கள்
தமிழகத்தில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பல ரெயில் நிலையங்களில், நடைமேடைகளில் முழுமையாக மேற்கூரை வசதி இல்லை என்ற குறைபாடு உள்ளது.
இதை தொடர்ந்து முழுமையான மேற்கூரை வசதி இல்லாத ரெயில் நிலையங்களில் மேற்கூரையை முழுமையாக அமைக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைரோடு, அம்பாத்துரை ஆகிய 5 ரெயில் நிலையங்களில் நடைமேடைகளில் முழுமையாக மேற்கூரை அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேற்கூரை வசதி
இதில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை பொறுத்தவரை 5 நடைமேடைகள் உள்ளன. இவற்றில் 2, 4, 5 ஆகிய 3 நடைமேடைகளில் முழுமையாக மேற்கூரை வசதி இல்லை. ஒருசில பகுதிகளில் மேற்கூரை இல்லாமல் இருப்பதால் மழையில் நனைந்தபடி பயணிகள் ரெயிலில் ஏறும் காட்சிகளை அடிக்கடி பார்க்கமுடிகிறது. எனவே அந்த நடைமேடைகளில் விடுபட்ட இடங்களில் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது.
அதேபோல் கொடைரோடு, அம்பாத்துரை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களில் தலா 2 நடைமேடைகளில் முழுமையான மேற்கூரை இல்லை. இதை தொடர்ந்து 5 ரெயில் நிலையங்களிலும் பயணிகள் வெயிலில் நிற்காத வகையில் முழுமையான மேற்கூரை அமைக்கப்பட இருக்கிறது.