கோர்ட்டு ஊழியர் வீட்டில் 5 பவுன் நகைகள்-ரூ.48 ஆயிரம் திருட்டு


கோர்ட்டு ஊழியர் வீட்டில் 5 பவுன் நகைகள்-ரூ.48 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே கோர்ட்டு ஊழியரின் வீட்டில் 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.48 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் அருகே கோர்ட்டு ஊழியரின் வீட்டில் 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.48 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோர்ட்டு ஊழியர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி கிராமமனக்கோடு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 55). இவர், வலங்கைமான் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாபநாசம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் வேலை முடிந்து இரவு 7 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது.

நகை-பணம் திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.48 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது.

பின்னர் இதுகுறித்து வலங்கைமான் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோர்ட்டு ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டுபோன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story