தனியார் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் படுகாயம்
வடமதுரை அருகே கல்லூரி பஸ்-ஜீப் மோதிய விபத்தில், தனியார் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). இவர், வடமதுரையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் தாளாளராக உள்ளார். நேற்று இவர், தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு ஒரு ஜீப்பில் சென்றார். அவருடன் அவரது மருமகள் லாவண்யா (27), 3 வயது பேத்தி ஆகியோரும் பயணம் செய்தனர். ஜீப்பை பெருமாள் ஓட்டினார். திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் ஜீப் சென்று கொண்டிருந்தது.
இதேபோல் தாமரைப்பாடியில் உள்ள தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பஸ் ஒன்று முன்னால் சென்றது. அந்த பஸ்சை பெண் டிரைவரான குளத்தூரை சேர்ந்த அம்பிகா (35) ஓட்டினார். அதில், 30 மாணவிகள் இருந்தனர்.
தம்பிநாயக்கன்பாறைப்பட்டி பிரிவு அருகே, மறுபுறம் செல்வதற்கு சாலையை கடக்க திடீரென திரும்பியது. அப்போது பின்னால் வந்த ஜீப், கல்லூரி பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜீப்பை ஓட்டிய பெருமாள், லாவண்யா, 3 வயது சிறுமி மற்றும் கல்லூரி பஸ் டிரைவர் அம்பிகா, கல்லூரி மாணவி சுவேதா (18) படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு திண்டுக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அந்த சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.