திருமங்கலம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலி


திருமங்கலம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 10 April 2024 11:56 AM IST (Updated: 10 April 2024 12:14 PM IST)
t-max-icont-min-icon

இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை தளவாய்புரத்திலிருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். காரை கனகவேல் மகன் மணி ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் காலை 6.30 மணிக்கு கார் விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள சிவரக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தது. அதே சமயம் வழியில் உள்ள எஸ்.பி.நத்தம் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி பின்னால் வைத்திருந்த பழக்கூடையுடன் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.

இதனை சற்றும் எதிர்பாராத காரை ஓட்டி வந்த மணி, இருசக்கர வாகனத்தில் வந்த வியாபாரி மீது மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மீது மோதியது.

அதிவேகமாக வந்த கார் அத்துடன் நிற்காமல் சாலையில் இருந்த தடுப்பு கம்பியிலும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. காலை நேரம் என்பதால் காரில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தை ஆகியோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். விபத்தில் கார் சிக்கியதும் அதில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். விபத்தை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மீட்பு பணியிலும் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் கொய்யாப்பழ வியாபாரி பாண்டி (வயது 55), காரில் பயணம் செய்த கனகவேல் (62), அவரது மனைவி கிருஷ்ணகுமாரி (58), கனகவேலின் மருமகள் நாகஜோதி (28), நாகஜோதியின் குழந்தை சிவா ஆத்மிகா (8) ஆகிய 5 பேரும் தூக்கி வீசப்பட்டும், காருக்குள் சிக்கி உடல் நசுங்கியும் பலியானார்கள்.

மேலும் காரில் இருந்த டிரைவர் மணிகண்டன், ரத்தினசாமி, மீனா, சிவா ஆதித்யா, சிவாஸ்ரீ ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கள்ளிக்குடி போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான குழந்தை சிவாஆத்மிகாவும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவா ஸ்ரீயும் இரட்டை குழந்தைகள் ஆவர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கோவில் திருவிழாவுக்கு சென்றுவந்தபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய மணிகண்டன் மதுரை பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்துள்ளார்.


Next Story