கடலூர் மாவட்டத்தில் 57 கிமீ தூரத்திற்கு 5 லட்சம் பனை விதைகள் நடப்படும் கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல்
கடலூர் மாவட்டத்தில் 57 கி.மீ. தூரத்திற்கு 5 லட்சம் பனை விதைகள் நடப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூர் சில்வர் பீச் சாலையில் உள்ள மண்டல பனை பொருள் பயிற்சி நிலையத்தில் பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, பனை விதைகள் சேகரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடற்கரையோர பகுதியில் நாட்டு நலப்பணி திட்ட நாளான செப்டம்பர் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரு கோடி பனை விதைகளை நடும் பணிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பை தடுக்கவும் பனை மரங்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களின் எண்ணிக்கை முன்பு 50 கோடியாக இருந்தது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் படிப்படியாக அழிவுக்குள்ளாகி தற்போது 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
57 கி.மீ. தூரம்
எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலத்தடி நீர் சேமிப்பை செறிவூட்டவும் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் கடற்கரை ஓரங்களில் 1076 கி.மீ. தூரத்திற்கு ஒரு கோடி பனை விதைகளை நடும் பணியை செப்டம்பர் 24-ந் தேதி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 57 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 லட்சம் பனை விதைகள் நடப்பட உள்ளது. 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டு பனை விதை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர் பசுமைவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.