5 கி.மீ. தூரம் சாலை அகலப்படுத்தும் பணி
தஞ்சை 2-ம் கட்ட புறவழிச்சாலையில் 5 கி.மீ. தூரம் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
தஞ்சை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த புறவழிச் சாலை 2 கட்டமாக மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 2-வது கட்டமாக தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் அருகே இருந்து பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா வரை 14 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சாலை பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் இதனை மேலும் அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி முதல்கட்டமாக 9 கி.மீ. தூரம் அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடர்ந்து மீதமுள்ள 5 கி.மீ. தூரம் உள்ள பணிகள் நடைபெற்றுள்ளன.தஞ்சையை அடுத்த சக்கரசாமந்தம்- பள்ளியக்ரஹாரம் இடையே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள் உரிய தரத்துடன் முறையாக நடைபெற்றுள்ளதா? என சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அகலப்படுத்தும் பணிகளின் அளவு, தார் முறையாக போடப்பட்டுள்ளதா? எனவும் பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தஞ்சை கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்ட பொறியாளர் கீதா, தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் தமிழழகன், உதவி பொறியாளர்கள் மோகனா, செல்வகுமார், ஒப்பந்த பணி மேற்பார்வையாளர் திருமாறன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.