கடந்த 2 ஆண்டுகளில் 5 போதை தடுப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது - அமைச்சர் கீதா ஜீவன்
கடந்த 2 ஆண்டுகளில் 5 போதை தடுப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாஞ்சாலை கிராமத்தில் உள்ள ரோட்டரி சங்கம் வாயிலாக இயக்கப்பட்டு வரும் மாணவர் தொழிற்பயிற்சி மையத்தை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் உடன இருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக நலத்துறை சார்பாக கடந்த 2 ஆண்டுகளில் சிறுவர்களுக்காக போதை தடுப்பு மையங்கள் 5 தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பல்வேறு துறை சார்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், குழந்தை திருமணம் தவறு என்பதனையும், 18 வயது பெண் குழந்தைகள் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான திருமணம் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தாலிக்கு தங்கம் திட்டம் தான் தற்போது புதுமை பெண் திட்டமாக மாற்றப்பட்டு உள்ளது 3 வருடமாக கிடப்பில் போடப்பட்ட மூன்றேகால் லட்சம் பயனாளிகள் தங்களது நேரிடையான வங்கி கணக்கு மூலம் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி தாலுகாவில் சமூகநலத்துறை சார்பில் கர்ப்பிணி இல்லாதவர்களுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.