5 அணைகளை மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்-டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


5 அணைகளை மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்-டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 23 Oct 2023 12:30 AM IST (Updated: 23 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண கர்நாடகா, தமிழகத்தில் உள்ள 5 அணைகளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்’ என்று பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

திருநெல்வேலி

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு

தென் மாவட்டத்தில் அமைதி ஏற்படுவதற்கு தொழில் வளம் பெருக வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வதை தடுத்து நிறுத்தாவிட்டால் கன்னியாகுமரியில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக இதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும். மாநில சுயாட்சி பற்றி பேசும் தி.மு.க. தனக்கு அதிகாரம் இருந்தும் மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுவது ஏன்?.

நீட் தேர்வு என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ? அந்த நோக்கம் தோல்வி அடைந்து விட்டது. இலங்கை அரசு கடல் கொள்ளையர்களுக்கு ஆதரவு அளிக்கின்றது. அவர்கள், தமிழக மீனவர்களை தாக்கி கொள்ளையடிக்கிறார்கள். இதனை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

காவிரி பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண தமிழக அரசு உடனே உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். வட இந்தியாவில் பக்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளுக்கும் ஒரு ஆணையம் உள்ளது. 5 மாநிலங்களில் உள்ள அணைகளை இந்த ஆணையம் கட்டுப்படுத்துகிறது.

அதேபோன்று காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கர்நாடகாவில் உள்ள 4 அணைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை ஆகியவற்றை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நூற்றாண்டு விழா

பின்னர் பாளையங்கோட்டையில் நடைபெற்ற தியாகி இமானுவேல் சேகரன் நூற்றாண்டு விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். விழாவுக்கு இமானுவேல் சேகரன் நூற்றாண்டு விழா குழு தலைவர் தேவேந்திர மக்கள் முன்னேற்ற கழக தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் தலைமை தாங்கினார்.

தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் தமிழ்மாறன், தேவராஜ் பாண்டியன், ஜெய கணேஷ், சந்திரகாந்தன், சுபாஷினி மள்ளத்தி, கண்மணி மாவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். எல்லாளன் நன்றி கூறினார்.


Next Story