மின்கம்பி அறுந்து விழுந்து 5 மாடுகள் சாவு
கோட்டைப்பட்டினம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 5 மாடுகள் இறந்தன. எனவே, பாதிக்கப்பட்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யனார், சார்லஸ், ஜேசுராணி. இவர்களுக்கு சொந்தமான 5 மாடுகள் நேற்று அதிகாலை 4 மணியளவில் அங்குள்ள வயல்களில் மேய்ந்து கொண்டு இருந்தன. அப்போது காலை 5 மணியளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த வழியாக சென்ற மின்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து மாடுகள் மீது விழுந்தன. இதில், மின்சாரம் பாய்ந்து அய்யனார், சார்லஸ் ஆகியோருக்கு சொந்தமான தலா ஒரு மாடு, ஜேசுராணிக்கு சொந்தமான 3 மாடுகள் என 5 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இதனை கண்ட மாடுகளின் உரிமையாளர்கள் கதறி துடித்தனர்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்தனர். இதனைதொடர்ந்து கோட்டைப்பட்டினம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் கால்நடை டாக்டர் பாலகிருஷ்ணன் வரவழைக்கப்பட்டு இறந்த 5 மாடுகளையும் பரிசோதனை செய்தார். பின்னர் அந்த மாடுகள் அப்பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 5 மாடுகள் மின்சாரம் பாய்ந்து இறந்து உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்குவதுடன், மீண்டும் இதுபோன்று அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.