ஒரே நாளில் அடுத்தடுத்து 5 வீடுகளில் திருட்டு


ஒரே நாளில் அடுத்தடுத்து 5 வீடுகளில் திருட்டு
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 5 வீடுகளில் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

விழுப்புரம்

வானூர்

கதவை உடைத்து திருட்டு

புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் தாலுகா புளிச்சபள்ளம் மேட்டுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். அவரது மனைவி ஜெயம்(வயது 65).

நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், ஜெயம் அணிந்திருந்த 4 பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இதனால் திடுக்கிட்டு எழுந்த ஜெயம் மற்றும் அவரது கணவர் சொக்கலிங்கம் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டனர். ஆனால் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர்.

மற்ற வீடுகளில்...

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த வேலு (45) என்பவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த காமாட்சி அம்மன் விளக்கு, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுமட்டுமின்றி அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், சண்முகம், அய்யனார் ஆகியோரின் வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் திருட்டு நடந்த வீடுகளில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர்.

ஒரே கும்பல்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 5 வீடுகளிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரே ஊரில் அடுத்தடுத்து 5 வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்தது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story