லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து தஞ்சை டி.ஐ.ஜி.யின் சிறப்பு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மயிலாடுதுறை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மன்னம்பந்தல் தனியார் கல்லூரி அருகில் உள்ள மெடிக்கல் ஒன்றில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை அருகே உள்ள அச்சுதராயபுரம் கிராமத்தை சேர்ந்த லட்சுமிநரசிம்மன் (வயது 49), பெருஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (49), மன்னம்பந்தலை சேர்ந்த சுரேஷ் (38), சேத்தூர் கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் (35), அடியாமங்கலம் கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் (38) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். லாட்டரி விற்பனை தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.