'நீட்' தேர்வை 4,847 மாணவ-மாணவிகள் எழுதினர்


நீட் தேர்வை 4,847 மாணவ-மாணவிகள் எழுதினர்
x

தஞ்சை மாவட்டத்தில் 8 மையங்களில் நேற்று ‘நீட்’ தேர்வு நடந்தது. இந்த தேர்வை 4 ஆயிரத்து 847 மாணவ, மாணவிகள் எழுதினர்.

தஞ்சாவூர்
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளி, பிளாசம் பப்ளிக் பள்ளி, ரேடியண்ட் இன்டர்நேஷனல் பள்ளி, சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக் கழகம், பிரிஸ்ட் பொறியியல் கல்லூரி, கும்பகோணத்தில் தாமரை பன்னாட்டு பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, பட்டுக்கோட்டையில் பிரிலியண்ட் பள்ளி ஆகிய 8 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேர்வு மையங்களுக்கு திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத வந்திருந்தனர். வெளியூர்களில் இருந்து மாணவ, மாணவிகள் காலை 10 மணிக்கே வரத்தொடங்கினர். காலை 11 மணி முதல் மைய வளாகத்துக்குள் தேர்வாளர்களை அனுமதித்தனர். தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு எழுத சென்ற மாணவர்கள் முககவசம் அணிந்து சென்றனர். சானிடைசர், தண்ணீர் பாட்டில், ஹால் டிக்கெட் போன்றவற்றை எடுத்துச்சென்றனர்.

பெற்றோரிடம் கழற்றி கொடுத்தனர்

தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் ஷூ, பெல்ட் போன்றவற்றை அணிந்தவர்களை அதை கழற்றி விட்டு செல்லுமாறும், மாணவிகள் தலையில் ஹேர்பேண்ட், கிளிப், காதில் தோடு, கழுத்தில் சங்கிலி உள்ளிட்ட நகைகள், துப்பட்டா, கட் ஷூ போன்றவைகளை அணிந்திருந்தால் அவற்றை அகற்றுமாறும் கூறி, பின்னர் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைக்குள் பேனா கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. மாணவிகள் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் நகைகளை கழற்றி பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

காலில் விழுந்து ஆசி

தேர்வு அறைக்குள் செல்லும் முன்பு மாணவ, மாணவிகள் பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர் அதிக தூரத்தில் இருந்து வந்தவர்கள் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற தங்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டு அனுப்பி வைத்தனர்.

தேர்வு மையத்தின் அருகே தேர்வர்களை தவிர வேறு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காலை 11 மணி முதல் 1 மணி வரை மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் எடுத்துச்செல்கிறார்களா? என சிறப்பு கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடந்தது.

383 பேர் தேர்வு எழுத வரவில்லை

தஞ்சை மாவட்டத்தில் 8 மையங்களில் 4 ஆயிரத்து 847 பேர் தேர்வு எழுதினர். 383 பேர் தேர்வு எழுத வரவில்லை. நீட் தேர்வு நடந்ததையொட்டி தேர்வு மையங்களை சுற்றிலும், தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.



Related Tags :
Next Story